தை அமாவாசையை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, குமரியில் திரளானோர் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கடற்கரை, நதிக்கரைகளில் குவிந்து வழிபாடு

By செய்திப்பிரிவு

தை அமாவாசை தினத்தையொட்டி திருநெல்வேலி, பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் திரளானோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசையின் போது இந்துக்கள் நதிக்கரை மற்றும் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆடி அமாவாசை தினத்தில் கடற்கரை, ஆற்றங்கரைகளில் தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப் பட்டிருந்தது. தற்போது நோய் பரவல் குறைந்துள்ளதை அடுத்து தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அனுமதி அளித்திருந்தது.

திருநெல்வேலியில் வண்ணார் பேட்டை, குறுக்குத்துறை, அருகன் குளம் தாமிரபரணிக் கரையில் தர்ப்பணம் கொடுப்பதற்காக நேற்று அதிகாலையிலேயே கூட்டம் அதிகமிருந்தது. இதுபோல் பாபநாசம் தாமிரபரணி கரையிலும், தென்காசி மாவட்டம் குற்றாலத்திலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டனர். தாமிரபரணியிலும், அருவியிலும் குளித்து வழிபாடு நடத்தி, அவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்து, தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். திரேஸ்புரம் உள்ளிட்ட மாவட்டத்தின் இதர கடற்கரை பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை அமா வாசையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து கால சந்தி பூஜையாகி தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமானோர் கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயிலில் நேற்று அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

இதுபோல ஏரல், வைகுண்டம், முறப்பநாடு உள்ளிட்ட தாமிரபரணி நதிக்கரைகளிலும் ஏராளமானோர் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

கன்னியாகுமரி

தை அமாவாசையை முன் னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பலி தர்ப்பணம் கொடுப்பதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று அதிகாலையில் இருந்தே முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புனித நீராடினர். கரோனா ஊரடங்குக்கு பின்னர் முக்கடல் சங்கமத்தில் ஒரே நேரத்தில் அதிகமானோர் தற்போது தான் நீராடினர்.

புனித நீராடிய பின்னர் பக்தர்கள் கடற்கரை பகுதியில் புரோகிதர்கள் மூலம் பச்சரிசி, தர்ப்பை, எள் மற்றும் பூஜை பொருட்களுடன் பலிகர்ம பூஜை செய்தனர். பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட பொருட்களை தலையில் சுமந்தவாறு எடுத்துச் சென்று கடலில் கலந்து நீராடினர்.

தொடர்ந்து பகவதியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளில் பங்கேற்று தரிசனம் செய்தனர். பலிதர்பணம் செய்வதற்கு குமரி மட்டுமின்றி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங் களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் கன்னியா குமரி வந்திருந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்