திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். இதைக்கண்டித்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன குனிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தங்கராஜ் மகன் ராஜதுரை (28). லாரி ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் மாலை குனிச்சி மருத்துவமனை செல்வனூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ராஜதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், ராஜதுரை உயிரிழந்த சம்பவத்தை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற் பட்டோர் அங்கு திரண்டனர்.
அப்போது அவர்கள், "திருப்பத்தூர்-தருமபுரி சாலையில் குனிச்சி பகுதியில் வேகத்தடை இல்லாததாலும், டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளதாலும் இப் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. உடனடியாக டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும். குனிச்சி-செல்வனூர் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தி திருப்பத்தூர் - தருமபுரி பிரதான சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவ லறிந்ததும் கந்திலி காவல் துறையினர் அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளதாகவும், டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றுவது குறித்து மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திடம் கலந்தாலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். வேகத்தடை 2 நாட்களில் அமைத்து தருவதாக காவல் துறையினர் உறுதியளித்தனர். இதனையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
பின்னர், காவல் துறையினர் ராஜதுரை உடலை மீட்டு திருப்பத் தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த மறிய லால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago