காலிங்கராயன் கால்வாயில் சாயக்கழிவுநீரைத் திறந்த காரணத்தால் சீல் வைக்கப்பட்ட ஆலைகளை, விதிமுறைகளை மீறி திறந்த நிர்வாகத்தினர் மீது மொடக்குறிச்சி காவல்துறையினர் குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் வெண்டிபாளையம் பகுதியிலுள்ள காலிங்கராயன் கால்வாய் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள சாயம் மற்றும் சலவை ஆலைகள், ரகசியக் குழாய்கள் அமைத்து, சாயக்கழிவு நீரை நேரடியாக கால்வாயில் திறந்து விடுவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடந்து, கால்வாய் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள சாய, சலவை ஆலைகளில் மாசுகட்டுப்பாட்டு வாரிய மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சோதனை மேற் கொண்டனர். இதில் முறைகேடாக கழிவுநீரை வெளியேற்றிய 30-க்கும் மேற்பட்ட ஆலைகளின் மின்சார இணைப்பைத் துண்டித்த அதிகாரிகள், ஆலைகளுக்கு சீல் வைத்தனர்.
இவ்வாறு மூடப்பட்ட ஆலைகளை சில மணி நேரங்களில் திறந்த ஆலை நிர்வாகத்தினர், இரவு நேரங்களில் ஜெனரேட்டர் உதவியுடன் பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து, காலிங்கராயன் பாசனசபை விவசாயிகள், மாசுகட்டுப்பாடு வாரியத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் பரிந்துரையின் பேரில் மொடக்குறிச்சி காவல்துறையினர் வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் டெக்ஸ்டைல் மில்ஸ், பெரியசாமி டை ஹவுஸ் என்கிற இரண்டு ஆலைகள் மீது குற்றவழக்கு பதிவு செய்துள்ளனர்.
வருவாய்த்துறையினர் வைத்துச் சென்ற சீலை சட்ட விரோதமாக பிரித்ததுடன், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த்துறையினர் அனுமதியின்றி ஆலைகளை இயக்கியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago