அரசு விழாக்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கலைப் பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் அனைத்து வகை இசைக் கலைஞர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு கலைப் பண்பாட்டுத்துறை ஆணையர் வ.கலையரசி தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் உலக நாடக தினத்தையொட்டி நாடக விழா ரசிக ரஞ்சன சபா அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவுக்கு கலை பண்பாட்டுத்துறை ஆணையர் வ.கலையரசி தலைமை வகித்துப் பேசியது:
கலைப் பண்பாட்டுத்துறை மூலம் உலக இசை தினம், உலக நாட்டிய தினம், உலக ஓவியர் தினம் ஆகியவற்றுடன் உலக நாடக தினமும் கொண்டாடப்படவுள்ளது. புராணங்கள், இதிகாசங்கள், வரலாற்று சாரம்சம் கொண்ட நாடகங்கள், சமூக, கிராமிய மற்றும் மவுன நாடகங்களை மேடையேற்றம் செய்ய ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
இந்த விழாக்கள் கலை பண்பாட்டுத்துறையின் 7 மண்டலங்கள் மற்றும் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றங்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் திருச்சி மண்டல அளவிலான நாடக விழா இங்கு கொண்டாடப்படுகிறது.
கலைப் பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் மரபு இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் என அனைத்து வகை கலைஞர்களும் தங்களது குழுவின் விவரத்தை புகைப்படம் மற்றும் யுடியூப் லிங்க் ஆகியவற்றுடன் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் பதிவு பெற்ற குழுக்களுக்கு அரசு நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு அளிக்கப்படும்.
அரசு நிகழ்ச்சிகள் மட்டுமன்றி நிறுவனங்கள், தனியார் இந்த தளத்துக்கு சென்று விவரங்களை பார்வையிட்டு கலைக் குழுக்களுக்கு நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பளிக்கலாம் என்றார்.
விழாவில், சேலம் களரி தொல் கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையத்தினை சேர்ந்த கூத்துக் கலைஞர்கள், மணப்பாறையை சேர்ந்த கிருஷ்ணப்பா இசை நாடகக்குழுவினர் திருச்சி சாந்தி வசன நாடகக் குழுவினர் நாடகத்தை நடத்தினர்.
விழாவில், ரசிக ரஞ்சன சபா செயலாளர் முரளி, கலைப் பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் ஹேமநாதன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago