முன்னறிவிப்பின்றி விசுவக்குடி அணையை திறந்ததால் பயிர் சேதம் அன்னமங்கலத்தில் விவசாயிகள் மறியல்

By செய்திப்பிரிவு

விசுவக்குடி நீர்த்தேக்கத்தை திறந்துவிட்டு பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அன்னமங்கலத்தில் விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடியில் நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்தேக்கத்தின் தண்ணீரைக் கொண்டு அன்னமங்கலம், தொண்டமாந்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கே தெரியாமல், விசுவக்குடி அணை திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பின்றி நீர் திறக்கப்பட்டதால், அணையில் இருந்து வெளியேறிய நீர் அருகிலுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை அடித்துச் சென்றது. விவசாயப் பணிகளை மேற்கொள்ள நேற்று காலை தங்களது விளைநிலங்களுக்கு சென்ற விவசாயிகள், வயல்களில் தண்ணீரில் மூழ்கியும், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டும் பயிர்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரம்பலூர்-அன்னமங்கலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, முன்னறிவிப்பின்றி அணையை திறந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினர். தகவலறிந்து அங்கு வந்த அரும்பவூர் போலீஸார் மற்றும் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் பெரம்பலூர்-அன்னமங்கலம் வழித்தடத்தில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், "இந்து தமிழ்" நாளிதழிடம் கூறியது; எனது கவனத்துக்கு வராமலேயே தினக்கூலி பணியாளர் ஒருவர் நீர்த்தேக்கத்தை திறந்துவிட்டுள்ளார். அவரை பணியிலிருந்து விடுவித்துவிட்டேன். மேலும், அவர் மீது போலீஸில் புகார் செய்துள்ளேன். என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்