பெரம்பலூரில் 5 குழந்தைகள் மீட்பு

By செய்திப்பிரிவு

தமிழக காவல்துறை இயக்குநரின் உத்தரவின்படி, காணாமல்போன குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், கவனிப்பாரின்றி சாலையோரம் திரியும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாக பணிபுரியும் குழந்தைகள் ஆகியோரை ‘புன்னகையை தேடி' திட்டம் மூலம் மீட்டு, பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு அளிக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர், குழந்தைகள் நல குழுமத்தினருடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் அறிவுறுத்தலின்படி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அசீம் தலைமையிலான போலீஸார் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தைச் சேர்ந்த கோபிநாத், திவ்யா, கீதா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு குழந்தை தொழிலாளர்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 4 குழந்தைகளையும், சாலையோரம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு குழந்தையையும் மீட்டு, பெரம்பலூர் குழந்தை நல குழுமத்தினரிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE