திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
இதன் மாநிலத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற விவசாய அணி மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயன் அளித்த பேட்டி: திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதுவரை விவசாயிகளின் மீது அக்கறையில்லாமல் இருந்த அதிமுக அரசு, மு.க.ஸ்டாலின் அறிவித்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதாக அவசரம், அவசரமாக அறிவித்துள்ளது.
இதில், காவிரி டெல்டா பகுதிக்கு சுமார் ரூ.1,000 கோடி மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சேலம், ஈரோடு, தர்மபுரி ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் ரூ.5,000 கோடிக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த கடன்கள் அனைத்தும் கடந்த டிசம்பரிலிருந்து ஜனவரி மாதத்துக்குள் வழங்கப்பட்டுள்ளன.
இது, திட்டமிட்டு, வேண்டுமென்றே அதிமுகவினருக்கு மட்டும் கடன்களை வழங்கிவிட்டு, தற்போது தள்ளுபடி செய்துள்ளனர்.
இந்த விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு, அதிமுகவின் வெற்றிக்கு உதவாது. சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம் என்றார்.
இக்கூட்டத்தில் விவசாய அணியின் மற்றொரு மாநிலச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கரூர் ம.சின்னச்சாமி, துணைத் தலைவர் கோவை தமிழ்மணி, இணைச் செயலாளர்கள் மயிலாடுதுறை பால.அருட்செல்வன், வேதாரண்யம் எஸ்.கே.வேதரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago