திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் பத்ர தீபத்திருவிழாவை முன்னிட்டு தங்க விளக்கு ஏற்றும் வைபவம் நடைபெற்றது.
விழாவின் தொடக்க நாளான நேற்று முன்தினம் சுவாமி வேணுவனநாதர் மூலஸ்தானத்தில் ருத்திரஜெபம் மற்றும் அபிஷேக ஆராதனைகளும், திருமூலமகாலிங்கம், காந்திமதி அம்மன் மூலவர் சந்நிதிகளில் அபிஷேக ஆராதனைகளும், அம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்மன் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
விழாவின் 2-ம் நாளான நேற்று மாலையில் சுவாமி கோயில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றும் வைபவம் நடைபெற்றது. இந்த விளக்கு இன்று மாலை வரையில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். இன்று காலையில் பால்குட ஊர்வலம் நடக்கிறது. தங்க விளக்கிலிருந்து தீபம் எடுத்து வரப்பட்டு, மாலை 6 மணிக்கு சுவாமி கோயிலில் பிரகாரங்கள் மற்றும் சந்நிதிகளில் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இரவில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் சா.ராமராஜா உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago