திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்போர் மீது நடவடிக்கை ஆட்சியர் சிவன் அருள் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வெளிநாடுகளில் அறிமுகப் படுத்தப்பட்ட தேளி மீன், அணை மீன், பெரிய கெளுத்தி மீன் எனப்படும் ‘ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை’ வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. காரணம், இந்த வகை மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். தொடர்ந்து, இடை விடாமல் மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. 8 முதல் அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வரை வாழக்கூடியவை.

இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்துவிட்டால் அவைகளை அழிப்பது இயலாத காரியமாகும். மிகக்குறைந்த அளவிலான தண்ணீரில் கூட இம்மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் திறன்கொண்ட மீன்களாகும். இந்த மீன்களால் நன்னீர் மீன் இனங்களும் அதன் முட்டைகளை உணவாக்கி கொள்வதால், நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாயம் உருவாகும்.

மீன் இனங்களை அழித்துவிடும்

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை பண்ணை குட்டை களிலோ அல்லது மீன் வளர்ப்பு குளங்களிலோ வளர்த்தால் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் குளத்தில் இருந்து எளிதாக தப்பிவிட வாய்ப்புள்ளது. அவ்வாறு தப்பிச்செல்லும் மீன்களானது, ஏரி மற்றும் ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழித்துவிடும். அதுமட்டுமின்றி குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர மற்ற மீன்கள் பிழைக்க வாய்ப்பு இல்லாமல் போகும்.

இதனால், நமது உள்நாட்டு மீன்வர்கள் மீன்பிடிப்பதற்கும் அவர்களுடைய வாழ்வாதா ரத்துக்கு வழி இல்லாமல் போகும் நிலை உருவாகும். ஆகவே, திருப்பத்தூர் மாவட்டத் தில் மீன் விவசாயிகள் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை இருப்பு செய்து வளர்க்க வேண்டாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மீறி மீன் வளர்ப்போர்கள் மத்திய, மாநில அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் ரக கெளுத்தி மீன்களை வளர்ப்பது அல்லது விற்பனை செய்வது குறித்து புகார் வந்தால் தகுந்த நட வடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, பொதுமக்களும் இந்த வகை மீன்களை கொள்முதல் செய்ய வேண்டாம்’’. என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்