உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சங்கத்தின் மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் ஏ.ஆரோக்கியராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் திரண்டிருந்தனர்.
அங்கு, புதுச்சேரி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ளதுபோல, தமிழகத்திலும் மாதாந்திர உதவித் தொகையாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000, கடும் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,000 என உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத பணியிடங்களை தமிழக அரசு உறுதி செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயபால், மாவட்டச் செயலாளர் எம்.கோபிநாத், மாநில துணைச் செயலாளர் சி.புஷ்பநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டுச் சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, 32 பெண்கள் உட்பட 60 பேரை கைது செய்தனர்.
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்துக்கு வந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரை போலீஸார் அலுவலக வாயிலில் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன் மாவட்டச் செயலாளர் கணேசன், ஒன்றியத் தலைவர் ராஜீவ்காந்தி ஆகியோர் தலைமையிலும், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் மாவட்டத் தலைவர் கண்ணகி தலைமையிலும், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஜி.கிரிஜா, அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட நிர்வாகி எம்.தங்கவேல், இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே மாவட்டச் செயலாளர் கே.சண்முகம் ஆகியோர் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.
மேலும், கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நகரப் பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையிலும், நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன் ஒன்றியத் தலைவர் செந்தில்குமார், நகரச் செயலாளர் சண்முகநாதன் தலைமையிலும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்டச் செயலாளர் கணேசன் தலைமையிலும், திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்டத் தலைவர் சந்திரா தலைமையிலும் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago