திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சாலை விரிவாக்கப் பணிகளால் பாதிக்கப்படுவோர் கூட்டமைப்பின் தலைவர் கே.மாரப்பன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜூலு உள்ளிட் டோர் ஆட்சியர் சு.சிவராசுவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை முதல் துவாக்குடி வரை போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக சாலையின் இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டிடங்களை அப்புறப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதி வணிகர்கள் உட்பட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே, இந்தக் கட்டிடங்களுக்கு பாதிப்பில்லாதவாறு சேலம், பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ளதுபோல, பறக்கும் சாலை(உயர்மட்ட சாலை) திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும், இந்தச் சாலையில் வாகன நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சுற்றுச்சாலைத் திட்டத்தை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அரசுத் தரப்பில் உறுதி அளிக்காவிட்டால், தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கூட்டமைப்பின் செயலாளர் ரகுநாதன், பொருளாளர் பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago