திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை பெரிய கடைவீதி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தராத அதிமுக அரசை கண்டித்து, மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாநகராட்சி பிரதான அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுகவினர், ‘‘பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை விரைவில் மூட வேண்டும். சூயஸ் நிறுவனத்துக்கு மாநகராட்சி வழங்கிய குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும்’’ என்ற கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை உக்கடம் போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் இருந்து, ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன் கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாகப் புகார் தெரிவித்த திமுகவினர், இதைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி காந்தி சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE