அதிக வாக்காளர்கள் இருந்தால் இரண்டாக பிரிப்பு நாமக்கல் மாவட்டத்தில் 2,135 வாக்குச்சாவடிகளாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

கரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து ஆண், பெண் வாக்குச் சாவடிகளாக அமைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 512 வாக்குச்சாவடிகள் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு இரண்டாக பிரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 1,623 வாக்குச்சாவடிகள் இருந்தன.

அவற்றில் ராசிபுரம் (தனி) தொகுதியில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள 86 வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு 345 வாக்குசாவடிகளாகவும், சேந்தமங்கலம் தொகுதியில் 75 வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு 358 வாக்குசாவடிகளாகவும், நாமக்கல் தொகுதிக்குட்பட்ட 100 வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு 388 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.

பரமத்தி வேலூர் தொகுதியில் 79 வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு 333 வாக்குசாவடிகளாகவும், திருச்செங்கோடு தொகுதியில் 76 வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு 336 வாக்குச்சாவடிகளாகவும், குமாரபாளையம் தொகுதியில் 96 வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு 375 வாக்குச்சாவடிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி மாவட்டத்தில் தற்போது மொத்தம் 2,135 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என்றார்.

கூட்டத்தில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சுப்ரமணியம், வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்