ஈரோடு - பெருந்துறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்துசமய அறநிலையத்துறையின் ஈரோடு மண்டல இணை ஆணையர் அலுவலகம் தொடக்க விழா நேற்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் அலுவலகத்தை தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறியதாவது:
இந்து சமய அறநிலையத் துறை மாநில அளவில் 11 மண்டலங் களையும், 28 கோட்டங்களையும் உள்ளடக்கியதாகும். இதனை விரிவாக்கம் செய்யும் வகையில், சென்னையில் கூடுதலாக ஓர் இணை ஆணையர் அலுவலகம் மற்றும் புதிதாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, நாகப்பட்டினம், திண்டுக்கல், கடலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி என மொத்தம் 9 இணை ஆணையர் அலுவலகங்கள், 171 பணியிடங்களுடன் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவை இணை ஆணையர் மண்டலத்திலிருந்து ஈரோடு மற்றும் சேலம் இணை ஆணையர் மண்டலத்திலிருந்து நாமக்கல் மாவட்டங்களைப் பிரித்து, ஈரோடு மண்டல இணை ஆணையர் அலுவலகம் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டது.
புதிய இணை ஆணையர் மண்டலம் தோற்றுவிக்கப் பட்டதால் திருக்கோயில்களின் திருப்பணிகள், நிர்வாக பணிகள், ஆக்கிரமிப்புகளிலிருந்து திருக்கோயில் சொத்துக்களை மீட்டல் மற்றும் இணை ஆணையர் நீதிமன்ற பணிகள் விரைந்து செய்திட வழிவகை ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் ரூ.85 கோடி மதிப்பிலான 4 ஆயிரத்து 816 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களும், 35 ஆயிரத்து 012.19 சதுர அடி பரப்பளவுள்ள மனைகளும், ஆயிரத்து 440 சதுரஅடி பரப்பளவுள்ள கட்டிடங்களும் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது, என்றனர்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர்கள் உண்ணாமலை, அன்னக்கொடி, தமிழரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago