திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் சா.ராமராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இக்கோயிலில் பத்ர தீபம் விழா இன்று (9-ம் தேதி) தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழா நாட்களில் சுவாமி வேணுவனநாதர் மூலஸ்தானத்தில் ருத்திரஜெபம் மற்றும் அபிஷேக ஆராதனைகளும், திருமூலமகாலிங்கம், காந்திமதி அம்மன் மூலவர் சந்நிதிகளில் அபிஷேக ஆராதனைகளும், அம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்மன் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.
விழாவின் 2-ம் நாளான 10-ம்தேதி மாலை 6.43 மணிக்கு மேல் இரவு 7.43 மணிக்குள் சுவாமி கோயில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அடுத்த நாள் 11-ம் தேதி மாலை 6 மணிக்கு சுவாமி கோயிலில் உள் சந்நிதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்மன் உள் சந்நிதி, வெளிப்பிரகாரங்கள், ஆறுமுகநயினார் சந்நிதி, வெளிப்பிரகாரங்களில் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்படும். மேலும், அன்று இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும், விசேஷ அலங்காரத்துடன் வீதியுலா நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago