9,11-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளிலும், அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் நேற்று தொடங்கின. மாணவ, மாணவியர் உற்சாகமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வந்தனர்.

கரோனா தொற்று காரணமாகபள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டுமார்ச் மாதம் மூடப்பட்டன. இதனால் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நோய் தொற்று குறைந்து வருவதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. தொடர்ந்து பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 19-ம் தேதி நேரடி வகுப்புகள் தொடங்கின.

கலை, அறிவியல், தொழில்நுட்பம், பாடப்பிரிவுகளில் பயிலும் அனைத்து மாணவ,மாணவியருக்கும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நேற்று தொடங்கின. இதுபோல், பள்ளிகளில்9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனால், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மாணவ, மாணவியர் உற்சாகமாக வந்தனர். அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு அவர்களுக்கான பாடங்கள் நடத்தப்பட்டன.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் அனைத்து வகுப்புகளும், பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளும் நேற்று தொடங்கின. சுமார் 11 மாதங்களுக்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கியதால் மாணவ, மாணவியர் உற்சாகமாக கல்வி நிலையங்களுக்கு வந்தனர்.

அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ, மாணவியர்தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். அதுபோல அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் மாணவ, மாணவியர் சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டனர்.

நாகர்கோவில்

நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உட்பட குமரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 487 பள்ளிகள் 11 மாதங்களுக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டு 9, 11-ம் வகுப்புகள் செயல்பட்டன. முகக் கவசம் அணிந்து வந்த மாணவ, மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசாதனை நடத்தப்பட்டு வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

இதுபோல் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டன. 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கு வந்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்