பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பரிந்துரைக்கப்படும் என்று வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் சி.பழனி கூறினார்.
கோவை மாவட்ட வணிக வரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகப் பிரதிநிதிகள், பட்டய கணக்கர்கள் ஆகியோருடன் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கூடுதல் ஆணையர் சி.பழனி பேசியதாவது:
சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை அமல்படுத்தியதால், வரி நிர்வாகம் வெளிப்படையாகவும், எளிமையான நடைமுறை கொண்டதாகவும் உள்ளது. வரி ஏய்ப்பைக் குறைப்பதில் சரக்கு மற்றும் சேவை வரி முக்கியப் பங்காற்றி வருகிறது. ஜிஎஸ்டி பதிவு, விலைப் பட்டியல் அறிக்கை, வரவுகளை மறுசீரமைத்தல், பில்களை உருவாக்குதல், பொருட்களின் இயக்கத்தைக் கண்காணித்தல், இடர் மேலாண்மை பதிவு, தெளிவு மற்றும் வெளிப்படையான விதிகள், பொதுவான வரி அடிப்படையிலான சரக்கு மற்றும் சேவைகள் என ஜிஎஸ்டி-யில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பின் மூலம் உள்ளூர் பொருட்களைச் சந்தைப்படுத்துவதும், உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. மேலும், இந்திய சந்தை ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. முன்பு மத்திய, மாநில அரசுகள் பல மறைமுக வரிகளை நிர்வகித்து வந்த நிலையில், ஜிஎஸ்டி-யால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கப்பட்டுள்ளதால், வரிவிதிப்பு முறை நிர்வாகம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, வரி ஆலோசகர்கள், வணிகப் பிரதிநிதிகள், பட்டயக் கணக்காளர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வரி மாறுதல்கள், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்புக்குள் கொண்டுவருதல் தொடர்பாக வணிகப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள், ஜிஎஸ்டி கவுன்சிலுக்குப் பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில், வணிக வரித் துறை இணை ஆணையர்கள் காயத்ரி கிருஷ்ணன், செ.ஞானகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago