காலிங்கராயனில் குழாய்கள் மூலம் கழிவுநீர் கலப்பு 4 இடங்களில் கண்டுபிடித்து நடவடிக்கை

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் செயல்படும் சாயப்பட்டறை ஆலைகள், குழாய்கள் மூலமாக காலிங்கராயன் கால்வாயில் சாயக்கழிவு நீரை முறைகேடாக திறந்து விடுவதாக தொடர் புகார்கள் எழுந்தன.

இதன் அடிப்படையில் காலிங்க ராயன் கால்வாய் பகுதிகளில், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன், அதிகாரிகளுடன் கடந்தவாரம் ஆய்வு மேற் கொண்டார். இதில், மூன்று சாயப்பட்டறைகள், காலிங்கராயன் கால்வாயில் கழிவுநீரைக் கலப்பது கண்டறியப்பட்டு, அந்த ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கு பின்புறம் உள்ள காலிங்கராயன் கால்வாய் பகுதியில் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர். இதில், சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து நேரடியாக குழாய்கள் மூலம் கழிவுகளைக் கொண்டு வந்து, நான்கு இடங்களில் காலிங்கராயன் கால்வாயில் கலப்பது கண்டறியப் பட்டது.

இதுதொடர்பாக வருவாய் துறை, மாசு கட்டுப்பாட்டுத் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மின் மோட்டார்கள் மூலம் கழிவுநீர் கொண்டு வரும் குழாய்களை இயந்திரம் மூலம் அகற்றினர். கழிவுநீரை வெளியேற்றிய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்