இருபது ஆண்டுகளாக செயல் படுத்தப்படாத திட்டங்கள் கூட, கடந்த இரு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் 227 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூ.1.70 கோடி மதிப்பிலான திருமாங்கல்யத்துடன், திருமண உதவித்தொகை மற்றும் மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.32 ஆயிரமாக இருந்தது. தற்போது தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதனால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டு, நலத்திட்டங்களைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இனிவருகின்ற காலத்தில் திருமணம் நடைபெறும்போதே, தாலிக்கு தங்கம் மற்றும் உதவித் தொகையை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். கோபி தொகுதியில் 21 ஆயிரம் பேரின் தனிப்பட்ட கோரிக்கைகள் 8 மாதத்தில் தீர்க்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்று வாக்குறுதியை நிறைவேற்றுவது வேறு. ஆனால், ஆட்சியில் இருக்கும்போது, 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் விவசாயிகளின் கடனை முதல்வர் ரத்து செய்துள்ளார். நான் சொன்னதால்தான் அரசு இந்த கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது என்று சிலர் சொல்கிறார்கள். 2006-ல் ஆட்சிக்கு வந்தால் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாகச் சொன்னவர்கள், அதனை நிறைவேற்றவில்லை. தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் போன்று, 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத திட்டங்கள் கூட இந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு திட்டங்கள் உங்களை நாடிவரவுள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago