ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு ஈரோட்டில் பெண் மருத்துவர்கள் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சையைச் செய்யலாம் என்ற மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் 7-வது நாளாக மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலோபதி மருத்துவ முறையில் உள்ள 58 வகையான அறுவை சிகிச்சைகளை ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவர்கள் செய்யலாம் என மத்திய அரசு கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கடந்த 1-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மருத்துவர்கள் நடத்தி வருகின்றனர். ஈரோடு அரசு மருத்துவமனை அருகே 7-வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் மகளிர் அணி சார்பில் பெண் மருத்துவர்கள் உண்ணா விரதத்தில் பங்கேற்றனர்.

உண்ணாவிரதத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் மகளிர் அணி மாநிலத் தலைவி சித்ரா தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் சி.என். ராஜா கலந்து கொண்டு பேசினார். மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர்கள் நான்சி, பூர்ணிமா, ஐஎம்ஏ மாவட்ட கிளைத் தலைவர் பிரசாத், மாநில துணைத்தலைவர் மல்லிகா, மாவட்ட செயலாளர் செந்தில்வேல், முன்னாள் மாவட்ட தலைவர் சுகுமார், விஜயகுமார் உள்பட நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற பெண் மருத்துவர்கள் கூறும் போது, பிரசவ காலங்களில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை இரு உயிர்கள் தொடர்புடையதாகும். முறையான மயக்கவியல் மருத்துவர் உதவியுடன் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் உதவியுடன் தான் மேற் கொள்ளப்பட வேண்டும். மாறாக, இவ்வகை அறுவை சிகிச்சையை பயிற்சியே இல்லாத ஆயுர்வேத மருத்துவத் துறையை நம்பி ஒப்படைக்க முடியாது. இது போல பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்