முள்ளுக்குறிச்சி ஜல்லிக்கட்டில் 785 காளைகள் சீறிப்பாய்ந்தன 40 மாடுபிடி வீரர்கள் காயம்

By செய்திப்பிரிவு

முள்ளுக்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 785காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 40 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முள்ளுக்குறிச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் ஒவ்வொன்றாக திறந்து விடப்பட்டன. அப்போது சீறிப் பாய்ந்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை அங்கு சூழ்ந்திருந்த ‘காளையர்கள்’ தாவிப்பிடித்து அடக்க முயன்றனர். அதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் லாவகமாக தப்பிச் சென்றன. சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசியது.

இதில் 40 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உரிய முதலுதவி அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த 10 வீரர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனர்.

மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காத ஜல்லிக்கட்டுக் காளை களின் உரிமையாளர் களுக்கு பரிசு வழங்கப்பட்டன. அதுபோல் மாடுகளின் திமிழ்களை பிடித்தபடி சிறிது தூரம் வரை சென்ற மாடுபிடி வீரர்களுக்கு கட்டில், மெத்தை வெள்ளி அரைஞாண் கயிறு மற்றும் பண முடிப்பு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.

போட்டியில் நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து 785 காளைகள் பங்கேற்றன. 253 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க களத்தில் இறங்கினர். நாமக்கல் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், ராசிபுரம் வட்டாட்சியர் கி.பாஸ்கரன், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.பி.சுரேஷ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்