நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் ஆலாம்பாளையத்தில் உள்ள மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி வீட்டை நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாநில நிர்வாகி ஈசன் தலைமையில் ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை குறித்து விவசாயிகள் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி உயர் மின்கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.4 கோடி இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். எனினும், இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. இதனால் இந்த திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் விருதுநகர் - திருப்பூர் இடையிலான மின் கோபுரம் அமைக்கும் திட்டப்பணிகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாகவும், மற்ற கோரிக்கைகளை முதல்வரிடம் ஆலோசித்து சொல்வதாகவும் வாக்குறுதி அளித்தார். எனினும், மேற்குறிப்பிட்ட கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
எனவே, விளை நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டும், ஒரு பெண் உள்பட 21 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர், என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் பள்ளிபாளையம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago