உயர் மின்கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மின் துறை அமைச்சர் தங்கமணி நிறைவேற்ற வேண்டுமென கொமதேக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உயர் மின்கோபுர திட்டங்களால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலான விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுஞ்சாலை ஓரமாக கேபிள் மூலம் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்று மாற்று யோசனை முன் வைக்கப்படுகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவில்லை.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சட்டப்பேரவையில் பேசும்போது, உயர் மின்கோபுர திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், நடைமுறையில் விவசாயிகளுக்கு சரியான இழப்பீட்டு தொகை வழங்கப்படுவதில்லை.
தமிழக அரசு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வரை, 765 கிலோவாட் உயர் மின்கோபுர திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகள், அமைச்சர் தங்கமணியை கடந்த ஜனவரி மாதம் சந்தித்து முறையிட்டனர். அப்போது, திட்டத்தை நிறுத்துவதாக விவசாயிகளிடம் அமைச்சர் தெரிவித்தார். ஆனால், திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனை கண்டித்து பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசும், தமிழக மின்சாரத்துறை அமைச்சரும் மதிப்பளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது, எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago