மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பழமையான கட்டிடங்களின் உறுதித் தன்மையையும், அண்மையில் கட்டப்பட்ட கட்டிடங்களின் விதிமீறல் களையும் உள்ளூர் திட்டக் குழுமமும், மாநகராட்சியும் ஆய்வு செய்யாமல் இருப்பதால் அடுத்தடுத்து பழமையான கட்டிடங்கள் இடிந்து உயிரிழப்புகள் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி பழமையான வீடுகள், வணிகக் கட்டிடங்கள் உள்ளன. கடந்த காலத்தில் வீடுகளாக இருந்த பல கட்டிடங்கள் தற்போது வணிகப் பயன்பாட்டுக்கு வாட கைக்கு விடப்பட்டுள்ளன.
இவற்றில் பல கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. எதிர்பாராது தீ விபத்து ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் வெளியேற அவசர வழி இல்லை. தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்ல முடியாது. கடந்த தீபாவளி நேரத்தில் விளக்குத்தூண் அருகே நவபத்கானா தெரு ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடம் இடிந்து தீயணைப்பு வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் மேல வடம்போக்கித் தெருவில் 80 ஆண்டுகள் பழமையான வீடு பராமரிப்புப் பணியின்போது கட்டிடம் இடிந்து 3 தொழிலாளர்கள் இறந்தனர். அதனால் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் உறுதித் தன்மை, விதிமீறல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: வீடு, கடை, மண்டபம், வணிக வளாகம் கட்டுவோர் அதன் சதுர அடியைப் பொறுத்து மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக் குழுமத்திடம் கட்டிட வரைபட அனுமதிபெற வேண்டும். ஆனால், வரைபடத்தில் உள்ளவாறு யாரும் கட்டிடம் கட்டுவதில்லை. கட்டிடங்களின் உறுதித் தன்மை, பார்க்கிங் வசதி, வரைபட விதிமீறல் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு ஆதரவாக அரசி யல் கட்சிகள் வருகின்றனர்.
வரைபட அனுமதியை மீறி கட்டிய கட்டிடங்களுக்கு விதிமீறல்களுக்கு தகுந் தவாறு அபராதம் மட்டும் விதித்துவிட்டு, வரி நிர்ணயிக்கப்படுகிறது என்றார்.
இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘தீ விபத்து நடந்த கட்டிடம் அனுமதி பெற்றுத்தான் கட்டியுள்ளனர். எதிர்பாராது கட்டிடம் இடிந்து விழுந்ததால் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல் சில நாட்களுக்கு முன் இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அதன் உரிமையாளர் மாநகராட்சி நகரமைப்புப் பிரிவில் கட்டிட அனுமதி பெற்றுத்தான் மராமத்துப் பணி மேற்கொண்டார். கவனக் குறைவாகச் செயல்பட்டதால் விபத்து நடந்துள்ளது. போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுப்பர். விதிமீறல் கட்டிடங்களின் உறுதித் தன்மையை மாநகராட்சியும், உள்ளூர் திட்டக் குழுமமும் இணைந்துதான் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுக்கு நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago