விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் கவுண்டிபாளையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் தோக்கவாடி கிராமத்தில் இருந்து பரமத்தி வட்டம் நல்லூர் கிராமம் வரை 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்சாரம் கொண்டு செல்ல உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் தேவனாங்குறிச்சி, தோக்கவாடி, சித்தளந்தூர், ஏமபள்ளி, அணிமூர் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய விளைநிலத்தில் உயர் மின்கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களின் வழியே மின்பாதை அமைக்கக் கூடாது, சாலையோரங்களில் புதை வட கம்பிகள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி, உயர் மின் அழுத்த கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் சங்க கூட்டு இயக்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கவுண்டிபாளையம் நடராஜன் என்பவரது விளை நிலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டி யக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பெருமாள் கூறும்போது, தமிழக அரசின் மின் திட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இந்த திட்டத்தை சாலை வழியாக கேபிள்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்துகிறோம். காவல்துறை, வருவாய்த்துறையை பயன்படுத்தி அரசு திட்டம் என்ற முறையில் பறிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்துகிறோம், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago