கல்விக்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போக்குவரத்துத் துறையின் சார்பில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக வகைமாற்றம் செய்யப்பட்டு, சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.
அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும், தனியார் மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்தும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை வசூலித்திட வலியுறுத்தியும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி நேற்று முதல் மாணவ, மாணவியர் தொடர் காத்திருப்புப் போராட்டத்தினை தொடங்கியுள்ளனர். கல்லூரி முன்பாக தரையில் அமர்ந்தபடி தங்களது போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் புதிதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு மருத்துவக் கல்லூரிகளான 24 கல்லூரிகளிலும் ஆண்டுக்கு ரூ.13 ஆயிரத்து 610 மட்டுமே கல்விக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. எங்கள் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், தொடர்ந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை வசூல் செய்திடும் வரை எங்களது போராட்டம் தொடரும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago