கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 302 துணை வாக்குச்சாவடி மையங்கள் ஆட்சேபணையை நாளைக்குள் தெரிவிக்க ஆட்சியர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழி கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசியது:

வரும் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலை கரோனா தொற்றின் காரணமாக பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 1,000 நபர்களுக்கு மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் அரவக்குறிச்சியில் 251, கரூரில் 261, கிருஷ்ணராயபுரத்தில் 253, குளித்தலையில் 267 என மொத்தம் 1,032 வாக்குச்சாவடி மையங்கள் தற்போது உள்ளன.

இதில், 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ளதாக அரவக்குறிச்சியில் 75, கரூரில் 107, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலையில் தலா 60 என 302 வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதையடுத்து, 302 துணை வாக்குச்சாவடி மையங்களை எங்கெங்கு அமைக்க உள்ளோம் என்பது குறித்த விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதில், ஏதேனும் ஆட்சேபணை இருந்தால், அதை எழுத்துப்பூர்வமாக நாளைக்குள் (பிப்.7) ஆட்சியர், வாக்காளர் பதிவு அலுவலர்களான சார் ஆட்சியர், கோட்டாட்சியர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான சம்பந்தப்பட்ட பகுதிகளின் வட்டாட்சியர்கள் ஆகியோரிடம் வழங்கலாம் என்றார்.

கூட்டத்தில், வாக்காளர் பதிவு அலுவலர்களான குளித்தலை சார் ஆட்சியர் ஷே.ஷேக்அப்துல்ரகுமான், கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், கரூர் நகராட்சி ஆணையர் சுதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அருள், தேர்தல் வட்டாட்சியர் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE