திருச்செங்கோடு நகராட்சியில் முறைகேடு டெண்டரை ரத்து செய்ய கொமதேக வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருச்செங்கோடு நகராட்சியில் முறைகேடாக விடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என கொமதேக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்குச் சொந்தமான 18 இனங்களுக்கு கடந்த 7-ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியானது. ஆளுங்கட்சியைத் தவிர மற்றவர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்ற நோக்கில், நகராட்சி நிர்வாகம் இந்த அறிவிப்பை மறைத்திருக்கிறது. அதையும் மீறி அறிவிப்பு குறித்து தெரிந்த 9 பேரின் விண்ணப்பப்படிவங்களை பெறாமல் நேற்று முழுவதும் காத்திருக்க வைத்து திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். அத்தோடு இன்று (நேற்று) டெண்டரில் பங்கேற்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட 9 பேரையும் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதை கண்டிக்கிறோம்.

நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நடைபெறும் டெண்டரில் யார் வேண்டுமானாலும் பங்கேற்க உரிமை இருக்கிறது. அதை மறுக்கும் வகையில், திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகமும், ஆளுங்கட்சியும் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். வெளிப்படைத் தன்மையோடு அனைத்து டெண்டர்களும் நடப்பதாகக் கூறும் முதல்வர், திருச்செங்கோடு நகராட்சியில் நடைபெறும் முறைகேட்டிற்கு என்ன பதில் சொல்ல போகிறார்? கமிஷனுக்காக அவசர அவசரமாக நகராட்சி வேலைகளை நியமன அடிப்படையில் கொடுக்க முயற்சிப்பதை கண்டிக்கிறோம். இந்த பணிகளுக்கான மறு ஒப்பந்தம் கோர வேண்டும். டெண்டர் கோரியதற்காக கைது செய்தவர்களை காவல்துறை உடனடியாக விடுவிக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்