திருச்சி, நாகை ஆட்சியர்கள் நேற்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:
மருத்துவத் துறையினரைத் தொடர்ந்து முன்களப் பணியாளர்களான உள்ளாட்சி, வருவாய், காவல் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை 4,342 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசியால் பாதிப்பு நேரிடுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். கரோனா தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மாவட்டத்துக்குத் தேவைப்படும் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு தடுப்பூசி இடுவது குறித்து அரசின் நிலையான வழிகாட்டுதல் வந்த பிறகு, அதைப் பின்பற்றி பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்றார். மருத்துவமனை முதல்வர் கே.வனிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாகப்பட்டினத்தில்...
நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று ஆட்சியர் பிரவீன் பி.நாயர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.பின்னர், அவர் கூறியது: கரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், நானும், கூடுதல் ஆட்சியர் பிரசாந்த்தும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோம்.
மருத்துவத் துறையை சேர்ந்தவர் களுக்கு கடந்த 20 நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனைகள், தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 12 இடங்களில் கரோனா வைரஸ் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பயிற்சி ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago