தமிழகத்தில் கரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளதால், விரைவில் பயணிகள் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார்.
ஈரோடு ரயில்நிலைய நடைமேடை, பயணிகள் காத்திருப்பு அறை, முன்பதிவு மையம் ஆகியவற்றை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஈரோடு ரயில் நிலைய வளாக முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரயில் இன்ஜின் மாதிரியை பார்வையிட்ட அவர், ரயில் பெட்டிகளை பிரிக்கும் வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரிக்கல் ரயில் இன்ஜினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆய்வின்போது, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் னிவாஸ் உட்பட ரயில்வே அலுவலர்கள் இருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் பொதுமேலாளர் ஜான் தாமஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை, 3 மாதங்களில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் கரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருகிறது. எனவே, மத்திய ரயில்வே துறை மற்றும் சுகாதாரத் துறையிடம் அனுமதி பெற்று விரைவில் பயணிகள் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பொதுப் பெட்டிகள் இணைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விரைவு ரயில்களின் வேகம் குறையக்கூடாது என்பதற்காக, பல்வேறு ரயில்நிலையங்களில் ரயில் நிறுத்தப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. கொடுமுடி ரயில்நிலையத்தில் அதிவேக ரயில்கள் நின்று செல்வதற்குரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவு செய்யப்படும். ரயில்களின் புதிய நிறுத்தங்கள் குறித்து ரயில்வே துறையும், ரயில்வே அமைச்சகம்தான் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். ஈரோடு ரயில்நிலையத்தில் 43 கண்காணிப்புvக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago