பரிகார பூஜைக்கு அனுமதி கொடுமுடி, பவானி கூடுதுறையில் அதிகரிக்கும் கூட்டம்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு தளர்வால், பவானி கூடுதுறை மற்றும் கொடுமுடியில் பக்தர்கள் பரிகார பூஜைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரி, பவானி மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்றுகூடும் கூடுதுறை அமைந்துள்ளது. சங்கமேஸ்வரர் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள கூடுதுறையில் பல்வேறு தோஷங்களுக்கு பரிகாரம் மேற்கொள்ளவும், அமாவாசை நாட்களில் முன்னோர்க்கு திதி கொடுத்து வழிபாடவும் ஏராளமான இந்துக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பரிகாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கூடுதுறை மற்றும் காவிரி, பவானி கரையோரங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பரிகார பூஜைகளை நம்பியிருந்த வேதியர்கள், கடைகளை நடத்துவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், பவானி கூடுதுறையில் பரிகார பூஜைகள் செய்ய மாவட்ட நிர்வாகம் சில நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கியது. இத்தகவல் பரவிய நிலையில், பரிகார பூஜைகளை மேற்கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பவானிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதி வேதியர்கள் கூறியதாவது;

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் பவானிக்கு வந்து பல்வேறு பரிகார பூஜைகளை மேற்கொள்வர்.

தென்னகத்தின் காசி எனப் போற்றப்படும் பவானி கூடுதுறையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 10 மாதத்துக்கு பின்னர் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளதால், கூடுதுறையில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல, கொடுமுடி மகுடேஸ்வரர் - வீரநாராயணப் பெருமாள் கோயிலிலும் பரிகார பூஜைகள் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்