மின்சார சட்டத் திருத்த மசோதா 2020-ஐ கைவிட வலியுறுத்தி மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நேற்று பல்வேறு இடங்களில் வேலைநிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. மின்சார சட்டத் திருத்த மசோதா 2020-ஐ கைவிட வேண்டும். மின் வாரியத்தில் ஏல முறையைப் புகுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நேற்று திருச்சி, பெரம்பலூர், கரூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மின் வாரிய தொமுச நிர்வாகி மலையாண்டி தலைமை வகித்தார. இதில், மின் வாரியத்தின் சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
இதேபோல, பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.அகஸ்டின் தலைமையிலும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு, சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவர் அகஸ்டின் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் கூட்டமைப்பின் பொருளாளர் எம்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொமுச சிறப்பு தலைவர் சு.பரமேஸ்வரன், சிஐடியு திட்ட செயலாளர் கே.தனபால் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன் தொமுச சார்பில் மாவட்டத் தலைவர் அண்ணாவேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
திருவாரூர் மின் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மின்வாரிய திட்டத் தலைவர் சகாயராஜ், தொமுச நிர்வாகி கலைச்செல்வன், சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago