10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் 2-வது நாளாக சாலை மறியல்

By செய்திப்பிரிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 2-வது நாளாக நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.பி.விவேகானந்தன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 45 பெண்கள் உட்பட 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 90 பேரும், பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 55 பேரும், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தலைவர் ஜபருல்லா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 47 பேரும், கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 82 பேரும் கைது செய்யப்பட்டனர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்டப் பொருளாளர் அந்துவன்சேரல் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உட்பட 40 பேரும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்ட இணைச் செயலாளர் வாசுகி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 28 பேரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் வெ.சோமசுந்தரம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உட்பட 80 பேரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்