புதிய ஓய்வூதியம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

By செய்திப்பிரிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூரில் அரசு ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, செவிலியர்கள், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அரசு ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.எஸ்.பால்ராஜ், செயலாளர் பி.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 214 பெண்கள் உட்பட 265 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்தி 124 பெண்கள் உட்பட 162 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதுதொடர்பாக மறியலில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, "எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை விடுதலை ஆகமாட்டோம். தொடர்ந்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.

நேற்று இரவு வரை அரசு ஊழியர்கள் விடுதலை ஆகவில்லை. இதையடுத்து, அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்