அலுவலகத்தில் இருந்து கொண்டு பயிர்ச் சேதங்களை தோராயமாக கணக்கெடுக்கக் கூடாது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சி.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.30,000, வாழை, கரும்புக்கு ரூ.1 லட்சம், மானாவாரி பயிர்களுக்கு ரூ.15,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். பகுதி அளவு சேதமடைந்திருந்தாலும் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் பயிர்ச் சேத நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டம் குறித்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.முகம்மது அலி கூறும்போது, “திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து வருவாய்த் துறை அலுவலர்கள், அலுவலகத்தில் இருந்து கொண்டு தோராயமாக கணக்கெடுப்பு நடத்தாமல், நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’’ என்றார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில், நிர்வாகிகள் இலக்குவன், முத்துசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்