சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.2-ம் தேதி முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.பி.விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், கரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி ஜாகிர் உசேன், கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 118 பெண்கள் உட்பட அரசு ஊழியர் சங்கத்தினர் 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பழனிசாமி கூறும்போது, “சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அரசு அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதுவரை, தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.
அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன், சாலைப்பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார், ஊரக வளர்ச்சித்துறை மாவட்டச் செயலாளர் பழனிவேல், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சங்கீதா ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முத்து உட்பட பலரும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உட்பட 77 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே பாலக்கரை பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பெரியசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 45 பேரை போலீஸார் கைது செய் தனர்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜபருல்லா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 51 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல், சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 74 பெண்கள் உள்ளிட்ட 112 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மா.ராணி தலைமை வகித்தார்.
இதில், மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன், நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சு.சிவகுமார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் எம்.சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago