கோபியை அடுத்த ஒடையாகவுண்டன்பாளையத்தில், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், ரூ.38.17 கோடி மதிப்பீட்டில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை பூமிபூஜையிட்டு, அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.38.17 கோடி மதிப்பீட்டில் 384 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டிட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு ரூ.5.76 கோடி, மாநில அரசின் நிதி ஒதுக்கீடு ரூ.26.88 கோடி மற்றும் பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.5.53 கோடி ஆகும். ஒரு வீட்டின் மதிப்பு ரூ.9.94 லட்சம். இதில் பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.1.44 லட்சம். ஒரு வீட்டின் பரப்பு 400 சதுர அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, கழிவறை மற்றும் குளியலறை அமையவுள்ளது. மேலும் தண்ணீர், மின்சாரம், சாலை, விளக்குகள் மற்றும் பூங்கா உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்படவுள்ளது.
பயனாளிகள் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் நீர்நிலை மற்றும் சாலை புறம்போக்கில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்புதாரர்கள் மற்றும் வீடற்ற நகர்புற ஏழை, எளிய மக்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு வீடுகள் வழங்கப்படும். இப்பணிகளை உரிய காலத்தில் விரைந்து முடித்து தகுதியின் அடிப்படையில் பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, கோபி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் எஸ்.வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago