ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்து இந்திய மருத்துவ சங்கத்தினர் ஈரோட்டில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு அருகே தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் இளம் மருத்துவர்கள் பிரிவு தலைவர் அபுல்ஹாசன், முன்னாள் மாநிலத் தலைவர் சுகுமார் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆயுர்வேத மருத்துவம் படித்த மருத்துவர்கள், 60 வகையான அலோபதி அறுவை சிகிச்சைகளைச் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், வரும் 2030-க்குள் ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது பாதுகாப்பில்லாத மருத்துவ முறையாகும்.
இதனைக் கண்டித்து 14 நாட்களுக்கு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். நாடு முழுவதும் 60 மையங்களில் இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் எங்களது உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் 38 ஆயிரம் தனியார் மருத்துவர்கள் உள்ளனர். எங்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அரசு, பல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கரோனா காலக் கட்டத்தில் நாடு முழுவதும் 740 அலோபதி மருத்துவர்கள் இறந்துள்ளனர், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago