மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து பல்வேறு தரப்பினர் வரவேற்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜூலு:
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்திருப்பது தங்கம் இறக்குமதி அதிகரித்து, விலை குறைய வாய்ப்புள்ளது.
தமிழகம்– கேரளா இடையே இணைப்பு சாலை திட்டமும், அதற்கான நிதி ஒதுக்கீடும் வரவேற்கத்தக்கது.
வருமான வரி உச்சவரம்பு ரூ.2.50 லட்சம் என்பதில் மாற்றமில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வகையில், மேலும் செஸ் வரி விதித்திருப்பது விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும்.
கரோனா தொற்று, பொதுமுடக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த பல்வேறு பிரிவினருக்கும் குறிப்பாக வணிகர்களுக்கு நிதியுதவி, கடனுதவி, வரிச்சலுகை போன்ற அறிவிப்புகள் இல்லாதது வருத்தமளிக்கிறது.
திருச்சி மருத்துவர் ஏ.முகமது ஹக்கீம்:
மத்திய பட்ஜெட் மக்களின் நல்வாழ்வு, நோய் தடுப்பு, சிகிச்சை ஆகிய நல்வாழ்வின் 3 பகுதிகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.
புதிதாக உருவாகும் நோய்களை கண்டறிந்து அவற்றுக்கு சிகிச்சை அளிக்க முதன்மை, இரண்டு மற்றும் மூன்றாம் நிலை சுகாதார அமைப்புகள், தற்போதுள்ள தேசிய சுகாதார நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நிதியுதவி, 17 ஆயிரம் கிராமப்புற மற்றும் 11 ஆயிரம் நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம், அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த சுகாதார ஆய்வகங்களை அமைத்தல் உள்ளிட்ட சுகாதாரத்துக்கும் மக்கள் நல்வாழ்வுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.
தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்க தேசிய அமைப்பாளர் ஆறுபாதி ப.கல்யாணம்:
விவசாயிகள் மற்றும் விவசாயிகள் நலனுக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.1.31 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும்.
மிக முக்கியமாக, காந்திய பொருளாதார மேதை டாக்டர் ஜே.சி.குமரப்பா திட்டங்கள் அடிப்படையில், இந்தியாவின் 5 லட்சம் ஊரக கிராமங்களில் நவீன தகவல் தொழில்நுட்பத்தை இணைத்து தற்சார்பு பசுமை கிராமங்களாக உருவாக்க வேண்டும் என கோரி வருவதை மத்திய அரசு அமல்படுத்தவில்லை.
அனைத்து விவசாய கடன்களுக்கும் 4 சதவீத வட்டி, ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க் கடன், விவசாயிகள் பழைய கடன்களில் இருந்து முழுமையாக விடுவிக்க சிறப்பு கடன் நிவாரணம் என்பவையும் நிறைவேறவில்லை.
தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் எஸ்.புஷ்பவனம்:
கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும் என கல்விக்கான குழுக்கள் பரிந்துரைத்த போதும் தற்போது 3.5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்துக்குள் 150 உயர்கல்வி நிறுவனங்களில் 150 தொழிற்பயிற்சி படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்பதும், விவசாயிகளுக்கான ரயில்பெட்டிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு என்பதும் வரவேற்கத்தக்கவை.
மத்திய பட்ஜெட்டில் கடன் வாங்குவதற்கும், வட்டி கட்டுவதற்கும் 36 சதவீதம் ஒதுக்கியிருப்பது பணவீக்கத்தை அதிகரிக்கும்.
கரோனா பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் முழு அளவில் பழைய நிலைக்கு திரும்பாத நிலையில், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இவற்றை தாங்க மாட்டார்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago