கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர் கூட்டங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையிலும், மக்களிடம் கோரிக்கை மனுக்கள் மட்டுமே பெறப்பட்டு வந்தன. இந்தநிலையில், 10 மாதங்களுக்குப் பிறகு மக்கள் நேரில் பங்கேற்ற குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 381 மனுக்கள் வரப்பெற்றன. அடமானம் வைக்கப்பட்ட இலவச வீட்டுமனையை, தனது பெயருக்கு எழுதித் தருமாறு கேட்டு மிரட்டல் விடுக்கும் நபர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து குழுமணி சாலை பேரூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கருப்பண்ணன்- தேன்மொழி தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் தீக்குளிக்க முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
இதேபோல, அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 213 மனுக்களும், கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 192 மனுக்களும், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 185 மனுக்களும் பெறப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago