விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

By செய்திப்பிரிவு

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி விமானநிலையத்தில் நேற்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்டிகோ விமானம் சென்னைக்கும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் அபுதாபி, கோலாலம்பூருக்கும் நேற்று காலை புறப்படத் தயாராக இருந்தன. அப்போது விமானநிலைய மேலாளர் அறைக்கான செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், விமானநிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார். அதிர்ச்சியடைந்த விமானநிலைய அதிகாரிகள் உடனடியாக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினருக்கு (சிஐஎஸ்எப்) தகவல் அளித்தனர்.

இதையடுத்து முதல் தளத்திலுள்ள காத்திருப்போர் அறையிலிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக மத்திய தொழிலக பாதுகாப்பு படை, வான் கட்டுப்பாட்டு பிரிவு உள்ளிட்டவற்றின் அதிகாரிகளுடன் விமானநிலைய இயக்குநர் எஸ்.தர்மராஜ் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே, அங்கு நடைபெற்ற சோதனையில் விமானநிலைய வளாகத்துக்குள் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து சிறிது தாமதத்துடன் விமான சேவைகள் மீண்டும் தொடங்கின. எனினும் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே, விமானநிலையத்துக்கு மிரட்டல் விடுத்த பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு விமானநிலைய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் அவர், காரைக்குடியைச் சேர்ந்த பத்மாவதி என தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘திருச்சியிலுள்ள மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அவர், சில மாதங்களாக அங்கு பணிக்குச் செல்லவில்லை. தற்போது காரைக்குடியில் வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்