கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 5 லட்சத்து 89 ஆயிரத்து 533 குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1,190 மையங்கள், நகர்ப்புறங்களில் 379 மையங்கள் என மொத்தம் 1,569 மையங்களில் போலியோ சொட்டுமருந்து வழங்கபட்டது. கோவை அரசு மருத்துவமனையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொட்டுமருந்து வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, "கோவையில் கடந்த ஆண்டு 3.38 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது. நடப்பாண்டு 3.41 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில்,3,36,798 குழந்தைகளுக்கு சொட்டுமருந்துவழங்கப்பட்டுள்ளது" என்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட 1,154 மையங்களில் சொட்டுமருந்து வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4,780 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் இப்பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் இடுவாயில் உள்ள அம்மா மினி கிளினிக் வளாகத்தில் சொட்டுமருந்து முகாமை கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்தொடங்கிவைத்தார். ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொத்தம் 2 லட்சத்து 12,380 குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே சொட்டுமருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார். அவர் கூறும்போது, ""மாவட்டத்தில் 775 மையங்களில், ஐந்து வயதுக்கு உட்பட்ட 40,355 குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட்டது. இதில் 3,203 பணியாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க உள்ளனர்" என்றார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலர்கள் முருகேசன், தரன் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago