கோரிக்கைகள் குறித்து அரசு அழைத்து பேசி தீர்வு காணா விட்டால், சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
திருச்சியில் அந்த அமைப்பின் சிறப்பு பொதுக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நேற்று நடை பெற்றது. கூட்டத்துக்கு அமைப் பின் மாவட்டத் தலைவர் க.மணி மாறன் தலைமை வகித்தார். மகளிரணி மாநிலச் செயலாளர் சௌ.கிருஷ்ணகுமாரி, மாவட்டச் செயலாளர் ஓ.சந்திரசேகரன், மகளிரணி மாவட்டச் செயலாளர் வ.ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.தாஸ், செய்தியாளர்களிடம் கூறியது:
ஜாக்டோ- ஜியோ போராட்டத் தில் ஈடுபட்டதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5,068 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் நடவடிக்கை மற்றும் குற்றக் குறிப்பாணை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவக் கலந் தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளதுபோல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
அதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக பிப்.12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைமையகங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். அதன்பிறகும், கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசி தீர்வு காணாவிட்டால் 3-வது கட்ட போராட்டமாக சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago