ஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் (தனி) என 8 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மகாராஷ்டிராவில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. 12,362 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,779 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3646 விவிபாட் (வாக்காளர் தான் யார் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம்), 3,938 மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான மாதிரி வாக்குப் பதிவு நேற்று ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பெல் நிறுவன பொறியாளர் முன்னிலையில் இப்பணிகள் நடைபெறுகின்றன. ரேண்டம் முறையில் 1,200 வாக்குப்பதிவு இயந்திரங்களில் 40 வாக்குகளும், ஆயிரம் இயந்திரங்களில் 72 வாக்குகளும், 500 இயந்திரங்களில் 71 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டு அதன் செயல்பாடு உறுதிசெய்யப்பட்டது.

அப்போது ஆட்சியர் சி.கதிரவன் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்ட பரிசோதனை முடிந்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. இன்று (நேற்று) மட்டும் 109 இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த பணி நாளையும் (இன்று) தொடரும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்