மஞ்சள், மரவள்ளிக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

மஞ்சள் மற்றும் மரவள்ளிக்கிழங்கிற்கு தனி வாரியம் அமைத்து, அவற்றுக்கு ஆதாரவிலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும், என தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சங்கத் தலைவர் சுதந்திரராசு முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க 1 ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் மானியமாக வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை பட்ஜெட்டின் போது அரசு அறிவிக்க வேண்டும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3500 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். மஞ்சள் வாரியம் மற்றும் மரவள்ளிக் கிழங்கு வாரியம் அமைத்து ஆதார விலை அறிவிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் தற்போது பாசனம் இல்லாத பகுதிகளில் உள்ள கொப்பு வாய்க்கால்களை சீரமைக்க தேவையான நிதி ஒதுக்கி பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும்.

சென்னிமலையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும். மாவட்டம் தோறும் இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களுக்கு புதிய வேளாண் சந்தைகளை ஏற்படுத்த வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு பிரீமிய தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.

பால் கொள்முதல் விலையை பசும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.60 ஆகவும், எருமை பால் ரூ.75 ஆகவும், உயர்த்தி வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளிலும் பெறப்பட்ட விவசாய பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்