ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே ஐடிபிஎல் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த நில உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்க அதிகாரிகள் வந்ததைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு தேவனகொந்தி வரை 312 கிலோ மீட்டர் தூரம் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களின் வழியாக பெட்ரோலிய குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும் சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அறச்சலூர் அருகே உள்ள அட்டவணை அனுமன்பள்ளி பகுதியில் ஐடிபிஎல் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு நிலத்தின் உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்க அறச்சலூர் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சென்றனர். இதனையறிந்த விவசாயிகள் அங்கு ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில், அரசின் மறு உத்தரவு வரும்வரை நிலம் கையகப்படுத்தக் கூடாது, பணிகள் நடத்தக்கூடாது என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை மீறி, விவசாய நிலத்தை கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கப்படுகிறது, என்றனர். விவசாயிகள் போராட்டத் தையடுத்து, அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago