திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான நெல் சாகுபடி அறுவடை பணிகள் தொடங்கவுள்ளதால் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திருநெல்வேலி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு தலைமை வகித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு பேசியதாவது:
இம்மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெல், வாழை மற்றும் காய்கறி பயிர்கள் குறித்து வருவாய்த்துறை, வேளாண்மை த்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்து வருகிறார்கள். இது முடிந்ததும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள் போதிய அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தரமான சான்று விதைகள், உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகளை வழங்கும் நோக்கத்தில் இவற்றை விநியோகம் செய்யும் நிறுவனங்களை வேளாண்மைத்துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். தரம் குறைந்த இடுபொருட்களை விநியோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பயிர் காப்பீடு
நடப்பாண்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் காப்பீடு நிறுவனத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் அரசு சார்பில் 80 சதவீதம், காப்பீடு நிறுவனம் சார்பில் 20 சதவீதம் கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்படுகிறது. வாழைக்கு ஏக்கருக்கு ரூ.3,211 பிரீமியம் செலுத்த வரும் பிப்ரவரி 28-ம் தேதி கடைசி நாளாகும்.
மாவட்டத்தில் ஏர்வாடி, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, பூலம், விஜயநாராயணம், முன்னீர்பள்ளம், ராதாபுரம், சமூகரெங்கபுரம், திசையன்விளை, லெவிஞ்சிபுரம், பழவூர், பணகுடி, வள்ளியூர் ஆகிய இடங்களில் உள்ள வாழை விவசாயிகள் வாழைக்கு காப்பீடு செய்யலாம். இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் ஏக்கருக்கு ரூ.64,220 காப்பீட்டுத் தொகை பெறலாம்.
மாவட்டத்தில் 248 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளர்களால் இம்மாதம் 1,369 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் 1,309 மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 38 மாதிரிகள் தரமற்றதாக கண்டறியப்பட்டு, 25.15 மெட்ரிக் டன் விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.55.33 லட்சமாகும் என்று தெரிவித்தார்.
நெல் கொள்முதல் நிலையம்
மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பிசான நெல் சாகுபடி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பல இடங்களில் அறுவடை தொடங்கவுள்ளதால் களக்காடு, திருக்குறுங்குடி உள்ளிட்ட தேவையான இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள், காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து நெல், வாழை பயிர்களை சேதப்படுத்துவது குறித்து வனத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வனவிலங்குகள் புகுவதை தடுக்க மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாழைக்காய் சந்தை
களக்காடு மற்றும் திருக்குறுங்குடி பகுதிகளில் அதிகளவில் வாழை விவசாயம் நடைபெறுவதால் அப்பகுதியில் வாழைக்காய் சந்தை, குளிர்பதன கிடங்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சமீபத்தில் பெய்த தொடர் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கணக்கெடுப்புக்குப் பின்னர் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago