திருநெல்வேலி பேட்டை சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் பல்நோக்கு திறன்மேம்பாட்டு மையத்தை ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள மாவட்ட தொழிற் மையத்தின் கட்டிடத்தில் திருநெல்வேலி சிறு மற்றும் குறு தொழில் சங்கம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளனர்.
தற்போதைய கரோனா காலத்தில் இம்மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் பன்முகத் திறன் கொண்ட பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையத்தில் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் முதல் பட்டதாரி இளைஞர்கள் வரை 3 மாதங்கள் இலவசமாக தொழிற்பயிற்சி பெறலாம். முதல் மாதம் பல்நோக்கு மேம்பாட்டு மையத்திலும், மீதமுள்ள இரண்டு மாதங்கள் தொழிற்சாலைகளிலும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் தொழிற்சாலைகளில் எளிதாக வேலை கிடைக்கும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
உதவி ஆட்சியர் அலர்மேல் மங்கை , மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ஜார்ஜ்பிராங்ளின், மாவட்ட தொழிற்மைய பொது மேலாளர் முருகேசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்கத்தலைவர் ஆனந்த்சேகர் பேசினார். துணைத் தலைவர் சு.சுந்தரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago