திருநெல்வேலியில் குற்றங்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும் முன்கூட்டியே தடுக்கும் வகையில் வார்டு விழிப்புணர்வு காவலர் திட்டத்தை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் தொடங்கி வைத்தார்.
இத் திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கும் தலா ஒரு காவலர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் ஒவ்வொருவரும் அந்தந்த வார்டுகளில் உள்ள மக்களோடு மக்களாக இணைந்து செயல்படவும், அவர்களுக்கு உதவவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அங்கு குற்றங்களையும், சட்டவிரோத செயல்களையும் தடுக்கவும், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாலமாகவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் குடியரசு தினத்தையொட்டி இத் திட்டத்தை தொடங்கி வைத்த மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் 55 வார்டுகளின் பொறுப்பு காவலர்களுக்கு தலைக்கவசங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘ஒவ்வொரு வார்டுக்கும் நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் அப்பகுதிகளை தங்கள் சொந்த கிராமம்போல் பாவிக்க வேண்டும். அங்குள்ள மக்களுடன் பழகி, அவர்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். அப்பகுதிகளில் ஏற்பட வாய்ப்புள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குற்றச்செயல்கள், போக்குவரத்து நெரிசல்கள் குறித்தெல்லாம் முன்கூட்டியே தெரிந்து அவற்றை தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து எடுக்க வேண்டும்.
இத்திட்டத்தால் பலன் கிடைக்க 4 மாதங்கள் வரை ஆகலாம். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் காவல்துறை சிறப்பாக செயல்பட முடியும். எனவே, மக்களின் தூதுவர்களாக ஒவ்வொரு வார்டுகளின் பொறுப்பு காவலர்களும் செயலாற்ற வேண்டும். இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு வாரமும் அந்தந்த பகுதி உதவி ஆணையர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர்கள் சதீஷ்குமார், சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago