தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறையின் மூலம் தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் 33 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியர் சமீரன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும்போது, ‘‘ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி, 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் நபர்களுக்கு அவர்களது ஆக்கிரமிப்பை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, குற்றாலத்தில் பாட்டை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டிய 22 பேர், பாறை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து வீடுகட்டி குடியிருக்கும் 11 பேர் என மொத்தம் 33 பேருக்கு சுமார் 1 சென்ட் வீதம் ரூ.57,58,415 மதிப்புள்ள இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில், செல்வமோகன் தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, ஆட்சியரின் நேர்முக உதவி யாளர்கள் கவிதா (பொது), ஷேக்அப்துல் காதர்(நிலம்), தென்காசி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முதன்மை அமைப்பாளர் சண்முகசுந்தரம், தென்காசி வட்டாட்சியர் சுப்பையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago